|
என்கவுண்டர் என்கிற
மோதல் கொலைகள்!
காவல் துறை சட்டம் - ஒழுங்கைக் காப்பதாய் இருக்க வேண்டுமானால், முதலில்
அது சட்டம் - ஒழுங்கை பின்பற்றி நடக்க வேண்டியது மிக மிக அவசியம். தவறு
செய்யும் காவல் துறையினரைத் தண்டிக்க சரியான சட்டம் தற்பொழுது இல்லாததால்தான்
மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.
கலைஞர் கருணாநிதியின் அரசு பொறுப் பேற்று இதுவரை ஏழு மோதல் கொலைகள்
நடைபெற்று விட்டன. இம்மாதிரி மோதல் கொலைகள் ஆட்சிப்பேதமின்றி தொடர்
கதையாய் இருப்பது வருத்தமளிக்கக் கூடிய செயல். இச்செயல்களை காணும் பொழுது,
தமிழகத்தில் நீதித்துறையின் தேவை மீது தொடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே
நினைக்கத் தோன்றுகிறது. அதோடு மட்டுமல்லாமல், மோதல் கொலைகள் உண்மைதானா?
என்கிற சந்தேகம் நம் எல்லோரிடத்திலும் ஏற்படுகிறது. குறிப்பாய், மணல்மேடு
சங்கர் கொல்லப்பட்ட விதம் குறித்து ஆழமாய் பார்த்தாலே இது புலப்படும்.
காவல் துறை விசாரணை சிறைவாசியாக சங்கர் இருக்கும் பொழுதே உள்ளூர் மாவட்ட
நீதிமன்றங்களிலும், சென்னை உயர் நீதி மன்றத்திலும் கடந்த 11-08-2005 (டபிள்யூ.பீ.
நெ.26011 / 2005), நாகப்பட்டிணம் காவல் துறையால் மோதல் கொலைக்கு
உட்படுத்தப் படுவேன் என்று வழக்கு தொடர்ந்தார்.
சங்கரின் தாயாரும் 20-12-2006 அன்று கீரனூர் நீதிமன்றத்தில் தனது மகன்
மோதல் கொலைக்கு உட்படுத்தப்படுவார் என அச்சப் படுவதாய் சொன்ன மனு மீது
சென்னை உயர்நீதி மன்றத்தில் (டபிள்யூ.பீ. நெ.40969/2006) அன்று பொது நல
வழக்கு தொடுத் திருந்தார். இதோடு மட்டுமல்லாது சங்கரின் தாயார், உச்சநீதி
மன்றத்தை 02-12-2006, டபிள்யூ.பீ. நெ. 202/2006 என்ற எண் இடப் பெற்ற
மனுவில், தன் மகன் மோதல் கொலைக்கு உட்படுத்த வாய்ப்புள்ளதால், தகுந்த
நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட
நீதிமன்றம், சங்கருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசை
கேட்டுக் கொண்டு, மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி
செய்தது.
இந்திய நாட்டிலுள்ள அனைத்து நீதி மன்றக் கதவுகளை தட்டிய பிறகும், கடந்த
05&02&2007 அன்று மணல்மேடு சங்கர் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம்
நீதிமன்றங்களுக்கு சென்றுவிட்டு மாலை வேளையில் சிறைக்கு திரும்பும்
வழியில், அவரை சுமந்து வரும் காவல் துறை வாகனம் விபத்துக்குள்ளான தாயும்,
சங்கர் தப்பமுயன்றதால், அவரை சுட நேர்ந்ததாயும் கூறுவது, நம் காதில் பூ
சுற்றும் நோக்கத்தோடு சொல்லப்படும் காரணமாகத் தோன்றுகிறது. இந்த
சந்தேகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டுமாயின், உயர்நீதிமன்றமோ அல்லது
உச்சநீதி மன்றமோ தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள
உத்தரவிட வேண்டும்.
இலங்கை
சிறையில்
வாடும் இந்தியர்கள்!
நமது அண்டை
நாடான இலங்கைத் தீவில் இந்திய வம்சத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்
அதிலும் குறிப்பாய் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களும், மீனவர்களும் பல்வேறு
வழக்கு களில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றும், சிலர் தண்டனைக் காலம்
முடிந்தும், சிறைக் கொட்டடைக்குள்ளேயே வாடி வதங்கி கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களை பற்றிய கவலை அங்குள்ள இந்திய தூதரகங்களும் அக்கரை
ஏதுமின்றி கேட்பாரற்று அனாதைகளாய் கிடக் கின்றனர். சிறைவாசிகளை உடனடியாய்
இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்குள்ள சிறைச்சாலைகளில் அடைக்கலாம். அவ்வாறு
செய்தால் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்படுவதோடு, அவர்களின்
உறவினர்கள் சிறை சென்று காண வழிவகுக்கும்.
இலங்கையுடன்
இந்திய அரசு பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டு நடைமுறை படுத்தப்படுகிறது.
இலங்கை, சார்க் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சார்க் நாடுகளிடையே
இது குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையப்பம் இடப்பட்டால்,
சிறைப்பட்ட நமது மக்களை குறைந்தபட்சம் பாதுகாக்க முடியும்.
தமிழகத்தில் மதுவிலக்கு
தமிழகத்தில்
மதுவிலக்குச் சட்டம் அமலில் இருந்த காலங்களில் காவல் துறையால் பதிவு
செய்யப்பட்ட குற்றங்கள் :
1961 - 1,12,889
1962 - 1,29,977
1963 - 1,23,006
1964 - 1,37,716
1965 - 1,65,062
1966 - 1,89,348
1967 - 1,90,713
1968 - 2,53,607
1969 - 3,06,555
1970 - 3,72,472
இதைப்
பார்க்கும்பொழுது தமிழகத்தில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டுமா?
வேண்டாமா?
|